×

தூங்கா நகரத்தில் தாமரை தூங்கும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்; wiki யானந்தா

‘‘புகார் வந்தவருக்கு பரிசாக மாநில தலைமை பதவி வழங்கி உள்ளது தாமரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘மன்னர் மாவட்டத்தில் கோடி கணக்கில் மோசடி செய்ததாக புகாரில் சிக்கிய இனிப்பு பெயர் கொண்டவர், இந்த மோசடி புகாரில் சிறைக்கு ெசல்லாமல் இருக்க உடனடியாக இந்தியாவின் விவிஐபி பெயரில் அறக்கட்டளை தொடங்கினார். ெதாடர்ந்து தாமரையில் இணைந்து கட்சி மாநில தலைவர் மூலமாக அரசு தொடர்பு பிரிவு மன்னர் மாவட்ட தலைவர் பொறுப்பையும் இனிப்பானவர் பெற்றுக் கொண்டார். சமீபத்தில் மன்னர் மாவட்டத்துக்கு தாமரையின் மாநில தலைவர் வந்தாரு. அப்போது இனிப்பானவர், மாநில தலைவரை வரவேற்கும் வகையில் மிக பிரமாண்டாக கட் அவுட் என்று வழிநெடுகிலும் வைத்து அசத்திட்டாராம். கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து இருக்க கூடிய மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் ஆகியோர் அந்த இனிப்பானவர் மீது உச்ச கட்ட கோபத்தில் உள்ளார்களாம். மன்னர் மாவட்டத்தில் நடக்கும் போராட்டங்களை யாருடனும் கலப்பதே இல்லையாம். இதுவும் சீனியர் தாமரை நிர்வாகிகளுக்கு கடுப்பாம். இதற்காக இவரை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்பதற்காக அவருடைய ஊழலை தோண்டி எடுத்து இருக்காங்க எதிர் குரூப். பண மோசடி புகாரில் சிக்கிய ஆதாரத்துடன் மேலிடத்துக்கு புகார் அனுப்பினாங்க. மாவட்ட தலைமை அனுப்பியது மட்டுமில்லாமல் மாவட்ட, ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகளை நேரில் அழைத்து இனிப்பானவர் மீது புகார் கொடுக்க தெரிவித்துள்ளதாம். இதில் அவர்களும், பணம் மோசடி குறித்து ஆதாரத்துடன் தலைமைக்கு புகார் அனுப்பி வர்றாங்க. இனிப்பானவர் பற்றி மேலிடத்துக்கு ஆதாரத்துடன் அடுக்கடுக்கான புகார் சென்றதால் இனிப்பானவரால் மாநில தலைவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம். அவரை ஆதரித்தால் பண மோசடி புகாருக்கு உடந்தையாக இருந்ததுபோல ஆகிவிடும். நீக்கவும் முடியாது அது இருவருக்கும் இடையில் சிக்கலை ஏற்படுத்திவிடும். நீக்கினால் கட்சி மாவட்டத்தில் காணாமல் போய்விடும் என்று மேலிடம் பயப்படுகிறதாம். அதை பார்த்த சீனியர்கள் இவர் இருந்தால்தான் மன்னர் மாவட்டத்தில் கட்சியே காணாமல் போகும் என்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போக்குவரத்துக் கழகத்துல என்ன பிரச்னையாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இடைநில்லா பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் கண்டக்டர்கள் இருப்பதில்லை. நாகர்கோவில், திருநெல்வேலி பஸ் நிலையங்களில் வைத்தே டிக்கெட் கொடுத்து விட்டு கண்டக்டர்கள் இறங்கி விடுவார்கள். ஆனால் இதற்கு இந்த பஸ்களில் தினமும் பயணிக்கும் ஆசிரியர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருக்கைகள் நிரம்பிய பின், கண்டக்டர்கள் ஏறி டிக்கெட் கொடுத்து சரிபார்த்து அனுப்ப 10 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் ஆகிறது. கண்டக்டருடன் சென்றால் அந்த 10 நிமிடத்தில் குறிப்பிட்ட தூரம் கடந்து விடும். இடையில் நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பிலும் பயணிகளை ஏற்ற முடியும். ஆனால் இப்போது டிக்கெட் கொடுத்து, சரிபார்த்து பஸ்சை அனுப்ப கூடுதல் நேர விரயமாவதாக கூறும் ஆசிரியர்களும், அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும், போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது கடுப்பாகி உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பெயரே தூங்கா நகரம்.. இங்ேக தாமரை துளிர்க்காமல் தூங்குவது ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சிக்கு, மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர், கட்சியின் மேலிடத்தின் மோதல் தொடர்பாக கட்சியை விட்டு 2 மாதங்களுக்கு முன் விலகினார். புறநகர் மாவட்ட தலைவரே, தற்காலிகமாக மதுரை மாநகரையும் சேர்த்து கவனித்து வருகிறார். காலியாக உள்ள மதுரை மாநகர் தலைவர் பதவியை பிடிக்க, முன்னாள் தாமரை நிர்வாகிகள் பலரும், மாநில தலைமையிடம் மோதினர். ஆனால், மாநில நிர்வாகியாக உள்ள இனிப்பானவர், மதுரை தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தன்னை விட இங்கு வேறு யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால், மாவட்ட தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்க விடாமல், முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.ஏற்கனவே, மதுரை மாநகரில், கட்சிக்காக செலவு செய்ய முடியாமல் இருந்த நேரத்தில், டாக்டர் சிக்கினார். மதுரையில் தாமரையை மலரச் செய்வதற்கு ‘ப’ வைட்டமின் கொடுங்கள் எனக்கேட்க, முதலில் செலவு செய்யுங்கள்; பிறகு பணம் தருகிறேன் என தலைமை கூறியதாம். அதை நம்பி, கடன் வாங்கி, பல கோடி செலவு செய்தார். பணம் வரவில்லை. இவரின் கள செயல்பாடுகள், மாநில நிர்வாகியான இனிப்பானவருக்கு பிடிக்கவில்லையாம். தன்னை டம்மியாக்கி விடுவாரோ என்று கருதியதால் இவருக்கும், டாக்டருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. எப்படி இவரை காலி செய்யலாம் என மாநில நிர்வாகி காத்திருந்த நேரத்தில், செலவு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், கோடிக்கணக்கான நஷ்டத்தால் டாக்டரே கட்சியை விட்டு வெளியேறி விட்டார்.இதனை பயன்படுத்தி, மாநகர் மாவட்டத்தையும், மாநில பதவியையும் தன் வசம் வைத்துக்கொள்ள முடிவு செய்த மாநில நிர்வாகி, தற்போது யாருக்கும் பதவி கொடுக்க விடாமல் தடையாக இருக்கிறாராம். இவருக்கு புறநகர் மாவட்ட தலைவரும் ஊதுகுழலாக செயல்படுவதால், இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலைமை கட்சியில் உள்ளது. இதனால், தாமரையின் முன்னாள் நிர்வாகிகள் பலரும் கட்சி பணியில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர். ஆர்வமுள்ள நபர்களும், டாக்டருக்கு நேர்ந்த நிலை தங்களுக்கு நேர்ந்தால் என்ன செய்வது என நினைத்து கட்சிக்காக செலவு செய்வதை தவிர்த்து வருகிறார்களாம். இதனால், மதுரையில் மீண்டும் தாமரை துளிர்விட முடியாமல் தவித்து வருகிறது என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தூங்கா நகரத்தில் தாமரை தூங்கும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்; wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Dunga ,wiki ,Yananda ,Tamarai ,Dhonga ,wiki Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...